Thursday, November 11, 2010

5 - ஷர்மிளாவின் இதயராகம் - முதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படம்


பேராதனை ஜுனைதீன் இலங்கைதமிழ் சினிமாத் துறையோடு நீண்டகாலத் தொடர்பு உடையவர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் என்பதோடு, ஆங்கிலப்படத்தில் உதவியாளராக பணியாற்றியவரும் கூட.






இவரது மனைவி ஜெக்கியா ஜுனைதீன் "சிந்தாமணி' பத்திரிகையில் தொடராக எழுதிய "ஷர்மிளாவின் இதயராகம்" என்ற தொடர்கதை வாசகர்களிடையே மிகுந்த வரவ்ற்பைப் பெற்றது. இதையே திரைப்படமாகத் தயாரித்தால் என்னவென்று எண்ணம் ஜுனைதீனுக்கு வந்தது. அதுவும் வர்ணப்படமாக தயாரிக்க நினைத்தார்.

கதாநாயகனாக அந்நாட்களில் சிங்களப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஒரு முஸ்லீம் நடிகரை தெரிவு செய்தார்கள். அவரது திரையுலகப் பெயர் சஷி விஜேந்திரா. அவருக்கு ஜோடியாக காமினி பொன்சேகா போன்ற பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வீணா ஜெயக்கொடி என்ற சிங்கள நடிகையை ந்டிக்க வைத்தார்கள்.

ஜுனைதீனுக்கு கலையுலகில் நிரைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் தன்னுடைய படத்தில் சந்தர்ப்பம் கொடுக்கவேண்டுமென்ற ஆசை அவருக்கு இருந்தது. இதனால் கதையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்து, பலரையும் சேர்த்துக் கொண்டார்.

வத்தளை அண்டிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. அரசாங்க ஸ்டூடியோவான 'சரசவிய" விலும் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

எஸ்.ராம்தாஸ் ,விஸ்வநாதராஜா,கே.ஏ.ஜவாஹர்,எம்.எம்.ஏ.லத்தீப், கலைச்செல்வன், உதயகுமார், மோகன் குமார், ஜோபு நசீர், ராஜம், ரஞ்சனி ஆகியோருடன் நானும் நடித்தேன்.

படப்பிடிப்பும் நீண்டுகொண்டே போனது. போதாதற்கு, வர்ணத்திரைப்படம் என்பதினால படச்சுருளுக்கான செலவும் அதிகம். ஒரு காட்சியை இரண்டு, மூன்று தடவை எடுக்க நேர்ந்தால் இரட்டிப்புச்செலவு. ஒரு வசதியற்ற கலைஞனால் எவ்வளவுதான் தாக்குப் பிடிக்க முடியும்.

1989ல் தயாரித்து முடிக்கப்பட்ட இந்தத்திரைப்படம் 4 வருடங்களின் பின்னரே திரைக்கு வந்தது. இத்திரைப்படத்தின் "டப்பிங்" நடந்த வேளையில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. எனக்கு ஒரு மேடை நடிகர் குரல் கொடுத்திருந்தார். வானொலி நடிகனாக குரலாலேயெ பிரசித்திபெற்ற எனக்கு, வேறு ஒருவர் குரல் கொடுக்க நேர்ந்தது பற்றி பத்திரிகைகளில் குறையாக எழுதியிருந்தார்கள்.

ஆரம்பத்திலேயே சண்டைகாட்சிகளுடந்தான் திரைப்படம் ஆரம்பித்தது. அதில் எனது பங்கு முக்கியமானதாக இருந்தது. வேகமான மோட்டார் சைக்கிள் ஓட்டம், தொங்கிப் பாய்தல் என்றெல்லம் சாகசங்கள் செய்தேன். நாடு போற்ற வாழ்க, அவள் ஒரு ஜீவநதி படங்களைப் போலவே வில்லத்தனமான பாத்திரம்தான் தந்தார்கள்.

பேராதனை ஜுனைதீன் திரைக்கதை வசனம் எழுதியதோடு சில பாடல்களையும் எழுதினார். மற்ற பாடல்களை விஸ்வநாதராஜா, புசல்லாவ இஸ்மாலிகா ஆகியோர் எழுதினார்கள். சரத் தசநாயாக்க இசையமைத்த இந்தப் பாடல்களை முத்தழகு, கலாவதி, எஸ்.வி.ஆர். கணபதிப்பிள்ளை, விஸ்வநாதராஜா ஆகியோர் பாடினார்கள். சிங்கள திரைப்பட இயக்குனரான சுனில் சோம பீரிஸ் படத்தை இயக்க, ஜெ.ஜே.யோகராஜா ஒளிப்பதிவு செய்தார்.

24.9.1993ல் கொழும்பு, கட்டுகஸ்தோட்டை, நுவரேலியா ஆகிய மூன்று இடங்களில் முதலில் திரையிடப்பட்டது.

No comments:

Post a Comment